சைவ ஈரல் குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு – 2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1 கப்
நறுக்கிய தக்காளி – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசலா – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை – 1
அன்னாசி பூ – 1
தேங்காய்-1\2 கப்
நல்லெண்ணெய் – 1/2 மேஜை கரண்டி
புதினா, மல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பச்சைப் பயிறை 4 மணி நேரம் நன்கு ஊறவைத்து, பிறகு சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை வாழை இலையில் வைத்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலில் 2 தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாச்சி பூ இவை அனைத்தும் சேர்த்து மிதமான சூட்டில் தாளித்துக் கொள்ள வேண்டும். சிறிது கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் வேகவைத்த நறுக்கிய பாசிப்பயிறு துண்டுகளை கடாயில் சேர்த்துக்கொள்ளவும்.
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி, மிளகாய் தூள் -2 தேக்கரண்டி, கரம் மசாலா, மல்லித்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மசாலாவை பச்சைபயிர் துண்டுகளோடு சேர்ந்ததும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து 1/2 மூடி தேங்காயை அரைத்து சேர்க்கவும். பின் அதில் சிறிதளவு மிளகுத்தூள், சீரகத் தூள் சேர்க்கவும். அதனுடன் சிறுது நறுக்கிய, மல்லித் தழைகளை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான சைவ ஈரல் குழம்பு தயார்.